என்னைப் பற்றி

My photo
நான் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் 4-ம் ஆண்டு பி.டெக் படிக்கிறேன். விகடன் பத்திரிக்கையில் மாணவப் பத்திரிக்கையாளராக பணிபுரிந்தவன்.இங்கு உள்ளவற்றை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய மறந்து விடாதீர்கள் .

Monday, July 27, 2009

கழுதை மீது ஏறி வந்த சுயேச்சை வேட்பாளர்!


கம்பம் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட கழுதை மீது ஏறி வந்தவர், மூன்று நிமிடம் தாமதமானதால் மனு தாக்கல் செய்யாமல் திரும்பினார்.

தமிழ் மாநில பிரமலைக் கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவை மாவட்டப் பொதுச் செயலாளராக இருப்வர் சேகர்ஜீ (44). இவர் கம்பம் தொகுதியில் மனு தாக்கல் செய்ய உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்திற்கு கழுதையில் அமர்ந்து வந்தார்.

ஆனால், தேர்தல் அலுவலர் மனு தாக்கல் நேரம் முடிந்துவிட்டது என்று கூறினார். இதையயடுத்து, தான் ஏறி வந்த கழுதையை வேனில் ஏற்றி அனுப்பி விட்டு இவர் பைக்கில் வீடு திரும்பினார்.

கழுதை மேல் ஏறி வந்து மனு தாக்கல் செய்ய வந்த இவரை பார்க்க வழி நெடுகிலும் கும்பல் திரண்டது.

நேறறு முன் தினம் தொண்டாமுத்தூரில் மனு தாக்கல் செய்ய வந்த ஒரு வேட்பாளர் மாட்டு வண்டியில் வந்தது குறிப்பிடத்தக்கது.

தேமுதிக வேட்பாளர்கள் இன்று மனு தாக்கல்

இடைத்தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களி்ல் 4 பேர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்

வேட்புமனு தாக்கல் நாளை மறுநாளுடன் முடிவடையும் நிலையில் தனது கட்சியின் வேட்பாளர்களை விஜய்காந்த் நேற்று அறிவித்தார்.

அதன்படி கம்பம் தொகுதியில் தேமுதிக மாவட்ட துணைச் செயலாளர் அருண்குமார், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் செளந்திரபாண்டியன், இளையான்குடி தொகுதியில் ராமநாதபுரம் மாவட்ட தேமுதிக பொருளாளர் அழகு.பாலகிருஷ்ணன் போட்டியிடுகின்றனர்.

தொண்டாமுத்தூர் தொகுதியில் செயற்குழு உறுப்பினர் தங்கவேலு, பர்கூர் தொகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட தேமுதிக செயலாளர் சந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதில் ஸ்ரீவைகுண்டம் வேட்பாளர் எம்.சௌந்தரபாண்டியன் சென்னையில் இருப்பதால் நாளை மனு தாக்கல் செய்கிறார். அவரைத் தவிர மற்ற 4 பேரும் இன்று மனு தாக்கல் செய்துவிட்டனர்.

சிபிஎம் வேட்பாளர்கள் அறிவி்ப்பு:

இதற்கிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான் போட்டியிடும் தொண்டாமுத்தூர், கம்பம் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

வேட்பாளர்களை அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் அறிவித்தார்.

வேட்பாளர்கள் விவரம்...

கம்பம் - தேனி மாவட்டச் செயலாளர் கே.ராஜப்பன்.
தொண்டாமுத்தூர் - பெருமாள்.

வேட்பாளர்கள் வாழ்க்கைக் குறிப்பு

கம்பம் ராஜப்பன் (64), 1968ல் மார்க்சிஸ்ட் கட்சியில் சேர்ந்தவர். தற்போது தேனி மாவட்டச் செயலாளர். மாநிலக்குழு உறுப்பினர், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர், மாநிலச் செயலாளர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். இவரது மனைவி அமுதா. இவர்களுக்கு பார்த்திபன், நவநீதகண்ணன் ஆகிய மகன்கள் உள்ளனர்.

தொண்டாமுத்தூர் பொது தொகுதி என்றாலும், தலித் இனத்தை சேர்ந்த வி.பெருமாள் (49) வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், கோவை மாவட்ட சிஐடியு என்ஜினியரிங் சங்க பொதுச்செயலாளர்.

கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர். கோவை மாவட்டத்தில் பல்வேறு தொழிலாளர் போராட்டங்களில் பங்கேற்றவர். மனைவி புனிதவதி. பாரதிசிந்தன், விவேகானந்த பாரதி என்ற 2 மகன்கள் உள்ளனர்

Thursday, July 23, 2009

ஈழத் தமிழனின் குரல்


உறவுகளே !
பௌத்தத்தின் பெயரால் தீவிரவாதம் .
சர்வதேச சமூகத்தின் வெறும் வாதம்
அதிகாரத்தின் பெறுவாய் அப்பாவிகளின்
உயிர் குடிக்க அலைகிறது.
பிணங்களும் ரணங்களுமே இன்று
ஈழ்த் தமிழனின் சொத்து.


தயவு செய்து மன்னித்து விடுங்கள்
இனியொருமுறை பிறக்க மாட்டோம் தமிழராய்!
சிங்களக் கொடியர்களின் காலணியில்
முடிந்து போன என் குழ்ந்தைகளின் வாழ்க்கை
உரிமை கேட்க முற்பட்டு
கற்பிழந்த என் குலப் பெண்கள் .


சொந்தங்களை இழந்து தவிக்கும்
நொந்து போன நெஞ்சங்கள்
சிறு முள் வேலிக்குள் முடிந்து போன வாழ்க்கை.
இடிந்து போன கூரைக்குள் இருப்பது இருபது பேர்.
தவித்த வாய்க்கு தண்ணீர் இல்லை.
பசித்த குழைந்தைக்கு பால் இல்லை.
பட்ட காயத்திற்கு மருந்தில்லை.


சலுகைகளை ஏற்க வேண்டாம் .
சம உரிமையை கேட்க வேண்டும்.
வீழ்ந்து விடவில்லை எங்கள் வீரம்
புறப்பட்டு தமிழா! ஈழம் நிச்சயம் வெல்லும்
தமிழன் யார் என்று உலகம் சொல்லும்
இவை கவிதையின் வரிகள் அல்ல.
காலம் பதில் சொல்லும் எனது கனவுகள்.


கனவுகள் மெய்ப்பட வேண்டும் .
கை கொடுங்கள் தோழர்களே!கைகொடுங்கள் !


Wednesday, July 22, 2009

கலாமிடம் மன்னிப்பு கேட்டது அமெரிக்கா நிறுவனம்

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை நிற்க வைத்து சோதனையிட்டு அவமானப்படுத்திய அமெரிக்காவின் காண்டிடென்டல் ஏர்லைன்ஸ் நிறுவனம் அதற்காக இந்தியாவிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

கடந்த ஏப்ரல் 21ம் தேதி அமெரிக்கா செல்ல டெல்லி விமான நிலையம் சென்ற கலாமுக்கு இந்த அவமானம் ஏற்பட்டது. அவரது ஷூவையும் கழற்றச் செல்லி சோதனையிட்டுள்ளனர் அந்த நிறுவன ஊழியர்கள். இதற்கு விமான நிலைய பாதுகாப்புப் பணியில் இருந்த மத்திய தொழில்துறை பாதுகாப்புபப் படையான சிஐஎஸ்எப் வீரர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவி்த்தபோதும் கூட இந்தச் சோதனையை அமெரிக்க ஊழியர்கள் மேற்கொண்டனர்.

அப்போது மத்திய படை வீரர்களை கலாம் அமைதி்ப்படுத்திவிட்டார். ஆனாலும் கலாமுக்கு நேர்ந்த அவமானம் குறித்து சிஐஎஸ்எப், விமான போக்குவரத்துறையின் பாதுகாப்புப் பிரிவுக்கு கடிதம் எழுதியது. இதையடுத்து விமானப் போக்குவரத்துத்துறை காண்டினென்டல் ஏர்லைன்சிடம் விளக்கம் கேட்டது. ஆனால், அவர்கள் பதில் தரவில்லை.

இந் நிலையி்ல் இது குறித்து நேற்று தகவல் பரவியதையடுத்து நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் கடும் அமளியில் இறங்கின. இதையடுத்து கலாமிடம் மன்னிப்பு கேட்பதாகவும், காண்டினென்டல் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விமானத்துறை அமைச்சர் பிரபுல் படேல் அறிவித்தார்.

தொடர்ந்து காண்டினென்டல் நிறுவனத்துக்கு நோட்டீசும் அனுப்பினார். மேலும் அப்துல் கலாமை சோதனையிட்ட அமெரிக்காவைச் சேர்ந்த காண்டினென்டல் ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யவும் விமான போக்குவரத்துத்துறையின் பாதுகாப்பு பிரிவு உத்தரவிட்டது.

இதையடுத்து இதில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது விமான நிலைய போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். மிக முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு சோதனையில் இருந்து விலக்கு அளித்து, மத்திய அரசு ஏற்கனவே சுற்றறிக்கை வெளியிட்டு இருந்தது. அதையும் மீறி சோதனை நடத்தியதால், விமான சட்டத்தின் 11(ஏ) பிரிவின்கீழ் இந்த வழக்குப் பதிவானது.

இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த விமான நிறுவன ஊழியர்களுக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும்.

இந் நிலையில் தனது செயலுக்கு முதலில் திமிராக பதிலளித்த காண்டினென்டல் ஏர்லைன்ஸ் நிறுவனம் இன்று மன்னிப்பு கேட்டுள்ளது. யாராக இருந்தாலும் சோதனை நடத்துவோம் என்று நேற்று இந்த நிறுவனம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் தங்களது செயலுக்காக இன்று அப்துல் கலாமிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளது அந்த நிறுவனம். அவரை அசிங்கப்படுத்தும் நோக்கத்தில் இதைச் செய்யவில்லை. விதிகளைப் பின்பற்றினோம். அவ்வளவு தான். இருந்தாலும் கலாமுக்கு இதனால் ஏதாவது தொந்தரவு ஏற்பட்டிருந்தால் அதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்கிறோம் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

சில்லறை கனவுகள்


எனக்கு வேலை கிடைக்கவில்லை .
அம்மாவுக்கு தைக்க சட்டை கிடைத்தது .
குத்தி எடுத்தாள்..
வார்த்தைகளால்.! என் நெஞ்சத்தையும் சேர்த்து!


நான் வறுமையை தொலைக்க
எண்ணிக் கொண்டிருந்தேன்.
ஆனால் அதுதான் என்னை
துளைத்துக் கொண்டிருந்தது .


வாழ்க்கையில் சாதிக்க நினைத்தேன்
உலகம் என் 'சாதி'யை மட்டும் பார்த்ததால்
நாதியற்றுப் போய் வீதியில் நின்றேன்.


பெரும்பணம்,தனி மரியாதை,சமதர்மம்,
சமூகநீதி,சுற்றுப்புற நேசம்
இவையாவும்
செல்லாத காசுகளாய்ப் போன
என் சில்லறைக் கனவுகள்.


வேலை தேடி எங்கும் அலைந்தேன்
ஓடி ஓடி களைத்துப் போனேன்!
இந்திய விலை நிலத்தில்
லஞ்சம் எனும் 'களை' பிடுங்கப் படாமலிருந்ததால் .

-வேலையில்லா இளைஞன்

Monday, July 13, 2009

ஜயா திருமா ஜயோ இது தகுமா??அண்ணன் திருமா அவர்களுக்கு,

அண்மையில் உலகத் தமிழர் பேரவை நடாத்திய கருத்தரங்கில் ஈழத்தில் 5 ம் கட்ட ஈழப்போர் வெடிக்கும் என்று முழங்கியுள்ளீர்கள். இதையே நீங்கள் ஒரு வருடத்திற்கு முன்னரோ, ஏன் ஒரு ஆறு மாதத்திற்கு முன்னரோ முழங்கியிருந்தால் நாங்களும் ஆ...வென்கிற வாயுடன் கைதட்டி அண்ணன் திருமா வாழ்க என்று வானதிரக் கத்தியிருப்போம்.

ஆனால் ஈழத்தமிழரிடமிருந்த இறுதி நம்பிக்கைகள் மட்டுமல்ல. எங்கள் உறவுகளையும் இருபத்தையாயிரத்திற்கு மேல் இழந்துபோய் மிகுதி மூன்று இலட்சம் உறவுகளையும் முட்கம்பி வேலிகளுக்குள் நாளுக்கு நாள் விசாரணையின் பெயராலும் வியாதிகளாலும் இழந்து கொண்டிருக்கும் இந்த நிலையில் 5 ம் கட்ட ஈழப்போர் என்கிற முழக்கம் மீதம் இருக்கின்ற ஈழத்தமிழர்களையும் கட்டம் கட்டமாக கொலை செய்யவழி வகுத்து விடுமோ என்கிற நியாயமான பயமே காரணமாகும்.

அண்ணா உங்களுக்கு ஒன்று தெரியுமா ! ஈழத்தில் நடந்த இறுதிப்போரில் இருபத்தையாயிரம் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதனை, ஆதாரங்களுடன் அதற்கான நீதி விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்று மனித உரிமை அமைப்புக்களும் , பிரான்ஸ் , இங்கிலாந்து , அமெரிக்கா உட்பட பல நாடுகள் ஜ.நா சபையில் கொண்டு வந்த தீர்மானத்தினை முன்நின்று முறியடித்ததே நீங்கள் மானிலத்தில் கூட்டுவைத்துள்ள தி.மு.க. அரசின் பலர் மத்திய அமைச்சரவையை அலங்கரித்துக் கொண்டுள்ளதும் , நீங்கள் மத்தியில் கூட்டுவைத்துள்ள காங்கிரஸ் கட்சியைக் கொண்ட அரசுமான இந்திய அரசுதான் என்கிற பரம பரகசியம் உங்களிற்குத் தெரியாமல் போனது சோகமானதுதான்.

அடடடா.. சொல்ல மறந்துவிட்டேன் கலைஞர் கருணாநிதிகூட இலங்கையரசிற்கு எதிராகப் பல நாடுகள் கொண்டுவரும் தீர்மானத்திற்கு இலங்கைக்கு ஆதரவளிக்கவேண்டாமென்று மத்திய அரசிற்கு ஒரு கடிதமும் எழுதியிருந்தார். அண்மைக் காலத்தில் கலைஞர் அவர்கள் அதிகமான கடதாசிகளை ஈழத்தமிழர்களிற்காகக் கடிதமெழுதியே வீணடித்திருப்பார் என எண்ணத் தோன்றுகின்றது. இது மட்டுமல்ல ஈழத்தில் இதுவரை இந்திய இந்திய அதிகாரத்திற்கெதிராக உறுமிக்கொண்டிருந்த புலிகள்தான் அழிக்கப்பட்டு விட்டார்களே இனியாவது அங்குள்ள மக்களிற்கு ஏதாவது ஒரு தீர்வினைப் பெற்றுக் கொடுங்கள் என்று இந்திய அதிகாரத்திடம் கையேந்தப்போயிருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரையும் உங்கள் அன்னை சோனியாவோ தாத்தா மன்மோகனோ சந்திக்காதது மட்டுமல்ல இலங்கை அரசு எடுக்கும் எந்த முடிவிற்கு நாம் ஆதரவு வழங்குவோமென்று உங்கள் மலையாளத்து மச்சான் மேனன் அறிக்கை வேறு விட்டிருக்கிறார்...அஞ்சா நெஞ்சனே திருமா அண்ணா நாங்கள் உங்களிடம் கெஞ்சிக் கேட்பதெல்லாம் ஒன்றுதான்.. அதாவது எங்களிற்கு ஈழம் நீங்கள் பெற்றுத்தரத் தேவையில்லை.. எங்களது உரிமைகளையும் நீங்கள் பெற்றுத்தரத் தேவையில்லை படுகொலை செய்ப்பட்டவர்களிற்கான நியாயங்களையோ இழப்பீடுகளையோ பெற்றுத்தரத் தேவையில்லை.. உங்களால் முடிந்தால் இறுதியுத்தத்தில் தாய் தந்தையரை இழந்து எவருமற்று முகாம்களில் முடங்கிப் போயிருக்கும் 800 ற்கு மேற்பட்ட அந்தச் சிறுவர்களை சிறை மீட்டு அவர்களின் எதிர் காலத்திற்கு ஏதாவது வழிகாட்டுங்கள்.

தங்கள் உடல் உறுப்புக்களை இழந்து ஊனமான இருபதாயிரத்திற்கும் மேற்பட்டவர்களை வாழ்க்கையை நோக்கி நடக்க வையுங்கள்.. தினம் தினம் முகாம்களில் இரவுகளில் காணாமல் போகும் எங்கள் சகோதரிகளை காமுகர்களின் பசி தீர்ந்தபின்னராவது காப்பாற்ற முடியுமா எனப்பாருங்கள். அவர்கள் கருக்களைக் கலைத்துவிட்டாவது உயிர் வாழ்ந்துவிட்டுப் போகட்டும்..அடைபட்டுக் கிடக்கும் மூன்று இலட்சம் வன்னி மக்களும் வன்னியில் வயற்காணிகள் உள்ளவர்கள்தான்..அவர்களை வெளியே விட்டாலே போதும்..அவர்கள் தங்கள் ஏர்களில் தங்களைப்பூட்டி உழுதாவது நெல்விதை போட்டுப் பிழைத்துக் கொள்வார்கள். இவற்றில் எல்லாவற்றையும் உங்களால் செய்யச்சொல்லி கேட்கவில்லை..உங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏதாவது ஒன்றைச் செய்தாலே உங்கள் படத்தை நாங்கள் பூசையறையில் வைத்து வணங்குவோம்..இவை எதுவுமே உங்களால் செய்ய முடியவில்லையா.. உங்களிற்கு ஓட்டுப்போட்டு உங்களை ஜெயிக்க வைத்த சனங்களிற்குள்ள பிரச்சனைகளையாவது தீர்த்து வைத்து உங்களை மணக்கோலத்தில் காணத்துடிக்கும் உங்களின் தாயாரின் கனவுகளையாவது நிறைவேற்றி உங்களிற்கு ஓட்டுப் போட்ட மக்களிற்கு ஒரு தலைவனாகவும் உங்கள் தாயாரிற்கு நல்ல மகனாவும் இருந்து விட்டுப்போங்கள்..இனியாவது ஈழம்.. போர் என்கிற வார்த்தைகளை தயவு செய்து உச்சரிக்காதீர்கள் என்று கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்.. நன்றி..வணக்கம்...

இப்படிக்கு ஈழத்து நாதியற்ற தமிழன்


இக்கடிதம் திருமா அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது

Friday, July 3, 2009

பிரபாகரனை கொலை செய்யுமாறு ராஜீவ் காந்தி உத்தரவிட்டார் – சிறில் ரணதுங்க

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை படுகொலை செய்யுமாறு இந்திய முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தி இந்திய அமைதி காக்கும் படையினருக்க உத்தரவு பிறப்பித்திருந்தார் என முன்னாள் இராணுவ ஜெனரல் சிறில் ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இருபது வருடங்களுக்கு முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

1987ம் ஆண்டு இந்திய அமைதி காக்கும் படையினரின் முகாம்களுக்கு பிரபாகரன் வருகை தந்த போது அவரை படுகொலை செய்யுமாறு ரஜீவ் காந்தி உத்தரவிட்டதாக, சிறில் ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பிழையான அணுகுமுறைகளினாலேயே இந்த யுத்தம் இரண்டு தசாப்த காலமாக நீடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது

டீசல் விலை உயர்வு எதிரொலி: சரக்கு லாரி வாடகை 25% உயர்த்த முடிவு

பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதை தொடர்ந்து சரக்கு லாரி வாடகையை 25 சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்து உள்ளது.

எண்ணெய் நிறுவனங்களின் இழப்பை சரிக்கட்ட மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதாக கடந்த சில நாட்களாக கூறி வந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4ம், டீசல் லிட்டருக்கு ரூ.2ம் உயர்த்தி அறிவித்தது.

இ‌ந்த திடீர் விலையேற்றம் காரணமாக வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக சரக்கு போக்குவரத்தை கையாளும் லாரி உரிமையாளர்கள் விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து உள்ளனர். டீசல் விலை ஏற்றம் காரணமாக, சரக்கு லாரி வாடகையை 25 சதவீதம் வரை உயர்த்த முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொதுச்செயலர் பழனிசாமி கூறுகை‌யி‌ல், தமிழகத்தில் 1.65 லட்சம் சரக்கு லாரிகள் உட்பட நாடு முழுவதும் 16 லட்சம் சரக்கு லாரிகள் ஓடுகின்றன. லாரி தொழிலை நம்பி ஓட்டுநர், உதவியாளர், மெக்கானிக், மூட்டை தூக்கும் தொழிலாளி என நேரடியாக 2.50 கோடி பேர் உள்ளனர்.

இப்போது டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.2.20 வரை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. ஏற்கனவே வேலை ஆட்கள் கிடைக்காமல் லாரி தொழில் நசிந்து, தொடர்­ந்து தொழில் நடத்த முடியாத நிலையில் டீசல் விலை உயர்வு அறிவிப்பு அதிர்ச்சியாக உள்ளது.

இந்த விலை உயர்வுக்கு லாரி உரிமையாளர் சம்மேளனம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. விலை உயர்வை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

டீசல் விலை உயர்வு காரணமாக சரக்கு லாரி வாடகையை 25 சதவீதம் வரை உயர்த்த முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக வரும் 13ஆம் தேதி நடைபெறும் மாநில சம்மேளன கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் எ‌ன்று பழனிசாமி கூறினார்.