என்னைப் பற்றி

My photo
நான் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் 4-ம் ஆண்டு பி.டெக் படிக்கிறேன். விகடன் பத்திரிக்கையில் மாணவப் பத்திரிக்கையாளராக பணிபுரிந்தவன்.இங்கு உள்ளவற்றை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய மறந்து விடாதீர்கள் .

Friday, January 7, 2011

ரூ 80 லட்சம் கோடி ஊழல் வழக்குகள்… எத்தனை நினைவிருக்கின்றன உங்களுக்கு?

ழக்கம் போல வருடம் முடிந்து, வழக்கம் போல ஆண்டு இறுதி அசைபோடல்கள் பத்திரிகைகளைப் போலவே, இணையதளங்களிலும் சம்பிரதாய பகுதியாக வர ஆரம்பித்துவிட்டன.

இந்த சம்பிரதாய தொகுப்புகளை மேலோட்டமாகப் பார்த்து வந்தபோது, ஒரு குறிப்பிட்ட செய்தி துணுக்குற வைத்தது.

அது, இந்தியாவில் குறிப்பிட்ட ஒரு கால இடைவெளிக்குள் நடந்த ஊழல்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா… ரூ 80 லட்சம் கோடி! அதாவது ரூ 1.80 ட்ரில்லியன்!! அதாவது இந்தியாவின் மொத்த வருவாய் எனப்படும் ஜிடிபியில் பாதி!!!

இந்த ஆண்டு பெரிதாக பேசப்பட்டு வரும் 2 ஜி, ஆதர்ஷ், காமன்வெல்த் விளையாட்டு, ஐபிஎல், வங்கித்துறை, எல்ஐசி முறைகேடுகள் மட்டுமல்லாமல், கடந்த 12 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் மொத்த மதிப்பு இது.

பத்திரிகைகள் / இணையங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் தரப்பட்டுள்ள மதிப்பீடுதான் இது. நிஜத்தில் இதைவிட அதிகமாகவும் இருக்கலாம் (நிச்சயம் குறைவாக இருக்க வாய்ப்பில்லை!).

இந்த 12 ஆண்டுகளாக நடந்த ஊழல்களில் மட்டுமல்ல, இந்திய சரித்திரத்தின் உச்சகட்ட ஊழல் என்றால் அது 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நிகழ்ந்துள்ள முறைகேடுகளும் அதற்கு பிரதிபலனாக ஆட்சியாளர்களுக்குக் கிடைத்த பெரும் தொகையும்தான்.

இந்த 80 லட்சம் கோடிக்கான மொத்த ஊழல்களையும் பட்டியலிட பக்கங்கள் போதாது. இருந்தாலும் சில பெரிய ஊழல்களைத் தருகிறோம். இவற்றில் எத்தனை ஊழல்கள் உங்கள் நினைவிலிருக்கின்றன என்பதை சோதித்துப் பார்த்துக் கொள்ள உதவும்.

1. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் (மதிப்பு: ரூ 1.76 லட்சம் கோடி)

இந்தத் தொகை, மன்மோகன் சிங்கின் ஆட்சிக் காலத்தில் நடந்த முறைகேடுகளின் மதிப்பு மட்டும்தான். ஆனால் 2001-ம் ஆண்டிலிருந்தே இதுபோல முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதையும் சேர்த்தால் கிட்டத்தட்ட ரூ 3 லட்சம் கோடியைத் தாண்டும் ஊழல் அளவு என்கிறார்கள். இந்த விசாரணைக்கு உச்ச நீதிமன்றமும் ஆணையிட்டுள்ளது.

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்துள்ள இந்த ஊழல் குறித்து உச்ச நீதிமன்றம் அடித்துள்ள கமெண்ட் இது: ‘இந்தியாவில் இதுவரை நடந்த ஊழல்களை வெட்கப்படச் செய்துள்ளது 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு’ (‘The spectrum scam has put ‘all other scams to shame!’.)

2. சத்யம் மோசடி (ரூ 14000 – 25,000 கோடி):

இவ்வளவுதான் ஊழல் நடந்தது என்று இன்னும் கூட அறுதியிட்டுச் சொல்ல முடியாத அளவுக்கு தோண்டத் தோண்ட முறைகேடுகள் வரைமுறையற்று கொட்டிக் கொண்டே இருப்பது ராமலிங்க ராஜுவின் சத்யம் மோசடி!

இது தனியார் துறையில் நடந்ததுதானே என்று விட்டுவிட முடியாது. பொதுமக்களின் பணம் சம்பந்தப்பட்டது.

இவ்வளவையும் செய்துவிட்டு, சிறையில் செல்போன், சாட்டிலைட் டிவி, பிராட்பேண்ட் இணைப்புடன் லேப்டாப், ஷட்டில்காக் விளையாட்டு என ராஜபோகத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறார் ராமலிங்க ராஜூ.

சின்னதாகத் திருடி மாட்டிக் கொள்பவர்களை செக்குமாடாய் அடித்தே கொல்கிறார்கள்!

3. எல்ஐசி – வங்கித் துறை கடன் ஊழல் (ரூ 1 லட்சம் கோடிக்கும் மேல்…)

மாணவர்கள் படிக்க கடன்கேட்டால், வீட்டுப் பத்திரம் தொடங்கி, அரைஞாண் கயிறு – கோவணம் வரை அடமானமாகத் தரமுடியுமா என விழிபிதுங்க வைக்கும் இந்திய வங்கித்துறை, பெரும் பணக்காரர்களின் டுபாக்கூர் நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாயை கடனாக வாரி வழங்கின. ஏன் தெரியுமா… இந்தக் கடன்களில் குறித்த சதவீதம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு லஞ்சமாகக் கைமாறியதுதான்.

இன்னொரு பக்கம் எல்ஐசி எனும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் வீட்டுக் கடன் பிரிவு பல ஆயிரம் கோடிகளை வாரி வாரி பெரும் தொழிலதிபர்களுக்கு வழங்கியுள்ளன. இந்தத் தொகை அப்படியே ஒரு சுற்று சுற்றி வந்து, ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் முக்கியப் பங்காற்றியிருக்கிறது என்பதுதான் ஹைலைட்.

வங்கித் துறை – எல்ஐசி ஊழலில் கைமாறிய லஞ்சத் தொகை எவ்வளவு என்பதை இன்னும் கூட மத்திய அரசால் சொல்ல முடியவில்லை. இப்போதைக்கு உத்தேசமாக ரூ 1 லட்சம் கோடி

4. ஹர்ஷத் மேத்தா (ரூ 5000 கோடி)

லட்சம் கோடிகளில் ஊழலைப் பார்த்துவிட்டவர்களுக்கு, ஹர்ஷத் மேத்தாவின் இந்த ஊழல் ‘ஜுஜுபி’யாகக் கூட தெரியலாம். ஆனால் இந்த ஊழல் நிகழ்ந்த 1991-ம் ஆண்டில் இது மாபெரும் தொகை. இன்றைய ஸ்பெக்ட்ரமுக்கு நிகரானது என்றுகூடச் சொல்லலாம்.

அதிகப்படியான விலை ஏற்றத்தை உருவாக்கி பங்குகள் விலையை ஏற்றி மக்களின் பல ஆயிரம் கோடியை ஸ்வாஹா செய்தவர் இவர்.

2002-ல் ஹர்ஷத் மேத்தா செத்துப் போய்விட்டாலும், அந்த முறைகேடுகள் தொடர்பான வழக்குகள் இன்னும் முடியவில்லை.

5. ஹஸன் அலிகான் (ரூ 80,000 கோடி)

ஹவாலா பணம் கடத்தியது மற்றும் வரி ஏய்ப்பின் மூலம் மட்டுமே ரூ 39120 கோடி பணத்தை கொள்ளையடித்தவர் இந்த ஹஸன் அலி. புனே நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் பார்ட்டி.

பல்வேறு வெளிநாட்டு வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பிக் கட்டாத வகையில் இதுதவிர ரூ 40000 கோடிக்கு செட்டில் செய்யுமாறு வருமான வரித்துறை இவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

6. வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்புப் பணம் (ரூ 21 லட்சம் கோடி)

கிட்டத்தட்ட தினத்தந்தியின் சிந்துபாத் கதை மாதிரி ஆகிவிட்டது, இந்திய விவிஐபிக்களின் கறுப்புப் பணத்தைக் கண்டறியும் முயற்சியும். சுவிஸ் வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகள் மற்றும் நிதி அமைப்புகளிடம் இந்திய தொழிலதிபர்களின் பணம் ரூ 21 லட்சம் கறுப்பாக பதுக்கி வைக்கப்ட்டுள்ளது. இது நன்கு தெரிய வந்துள்ள தொகை. இன்னும் வெளியில் தெரியாத தொகை எத்தனை லட்சம் கோடி என்று தெரியவில்லை.

7. தேயிலை ஊழல் (ரூ 8000 கோடி)

தேயிலைப் பயிர் சாகுபடியில் முதலீடு என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களிடம் ரூ 8000 கோடிக்கு மேல் வசூலித்து நாமம் போட்ட இந்த ஊழல் பலருக்கு நினைவிருக்குமா என்று கூடத் தெரியவில்லை.

8. கேதன் மேத்தா (ரூ 1000 கோடி)

ஹர்ஷத் மேத்தான் இந்த கேத்தனுக்கு குரு. இவரும் பங்குச் சந்தையை ஆட்டிப் படைத்து பணம் குவித்தார். போலிப் பெயர்களில் பங்குகளை வாங்கி, செயற்கையான டிமாண்டை உருவாக்கி, விலையை உயர வைத்து பங்குகளை விற்றார் இந்த கேத்தன். இதில் அடிக்கப்பட்ட கொள்ளை ரூ 1000 கோடி.

9. உர – சர்க்கரை இறக்குமதி ஊழல் (ரூ 1300 கோடி)

உரம் மற்றும் சர்க்கரை இறக்குமதி மூலம் மட்டுமே ரூ 2300 கோடி ஊழல் நடந்துள்ளது தொன்னூறுகளில். மேலும் மேகாலயா வனத்துறை ஊழல் ரூ 300 கோடி, யூரியா ஊழல் ரூ 133 கோடி மற்றும் பீகார் மாட்டுதீவன ஊழல் ரூ 950 கோடி (லாலு – ராப்ரி தேவி சம்பந்தப்பட்டது).

10. ஸ்கார்பென் நீர்மூழ்கி ஊழல் (ரூ 18,978 கோடி)

பிரான்ஸிடமிருந்து 6 நீர்மூழ்கிகளை வாங்கிய வகையில் 1997-ல் நடந்த மிகப் பெரிய ஊழல் இது. இதே காலகட்டத்தில் ராணுவத்தில் மேலும் ரூ 5000 கோடி ஊழல் வெளிவந்தது. பீகார் நில மோசடி ஊழல் ரூ 400 கோடி, பீகார் வெள்ள நிவாரண ஊழல் ரூ 17 கோடி, சுக்ராம் டெலிகாம் ஊழல் ரூ 1500 கோடி, எஸ்என்ஸி லாவாலின் மின்திட்ட ஊழல் ரூ 374 கோடி… என ஊழல் மலிந்த ஆண்டாகத் திகழந்தது 1997.

இவை தவிர மேலும் சில ஊழல்களும் இந்த 12 ஆண்டுகளில் நடந்துள்ளன.

2010 ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், சிஆர் பன்சாலி நிதித்துறை ஊழல் (1300 கோடி), இந்திய பங்கு வெளியீட்டு ஊழல் ரூ 1000 கோடி, அப்துல் கரீமின் முத்திரைத் தாள் மோசடி ரூ 500 கோடி, ஜார்கன்ட் மருத்துவ உபகரண மோசடி ரூ 130 கோடி, போலி சொஸைட்டிகளை உருவாக்கி செருப்பு தைக்க கடன் பெற்ற ஊழல் ரூ 1000 கோடி, தினேஷ் டால்மியாவின் பங்குச் சந்தை ஊழல் ரூ 595 கோடி, ஆர் பி ஜி குழுமத்தின் வீரேந்திர ரஸ்தோகி செய்த 43 கோடி ஊழல், யுடிஐ வங்கியின் ரூ 32 கோடி ஊழல், மரம் நடுவதன் மூலம் பெரிய லாபம் பார்க்கலாம் என்று கூறி பெரும் பணம் வசூலித்து நாமம் போட்ட உதய் கோயலின் ரூ 210 கோடி ஊழல், சஞ்சய் அகர்வாலின் ரூ 600 கோடி மோசடி… இப்படி பட்டியல் நீள்கிறது.

இந்த ஊழல்களில் சம்பந்தப்பட்டவர்களில் ஓரிருவருக்குத்தான் தண்டனை அறிவிக்கப்பட்டது. மற்ற பெரும் ஊழல்களில் சம்பந்தப்பட்டோர், பதவியை ராஜினாமா செய்து விட்டு ஜாலியாக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்! மக்களின் பலருக்கு இந்த ஊழல்களின் நினைவை மறதி ஆட்கொண்டுவிட்டதால், நீதிமன்றங்களில் சட்டத்தை எளிதில் வளைத்துவிட்டுத் தப்பிக்கிறார்கள் ஊழல்வாதிகள்!

நன்றி-என்வழி.காம்

Wednesday, January 5, 2011

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?

இந்தியா மனிதவளம் மிகுந்த நாடு. உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக மக்கள்தொகை இருந்தாலும் விரைவில் அதையும் விஞ்சிவிடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நாட்டின் மக்கள்தொகையில் பாதிக்குப் பாதி இளைஞர்கள் என்பது நமக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரும் மனித வளமாகும். இந்த வளத்தை முறையாகப் பயன்படுத்தத் தெரிய வேண்டும். ஓர் அணுகுண்டை ஒரு குழந்தைகூட வைத்து விளையாடலாம். ஆனால், அதிலிருந்து எழும் ஆற்றல் அகில உலகத்தையும் அழித்துவிடும் அல்லவா! இந்த அணுவை ஆக்கப் பணிகளுக்குப் பயன்படுத்தினால் இன்னொரு புதிய உலகத்தைக் கட்டி எழுப்ப முடியும். மலைப் பிரதேசத்தில் மழை பொழிந்து ஓடிவரும் காட்டாற்று வெள்ளம் மக்கள் வாழும் இருப்பிடங்களையும், வயல் வரப்புகளையும், வேளாண்மை செய்திருக்கும் பயிர்களையும், ஆடு மாடுகளையும் அழித்துவிட்டு வீணே கடலில் போய் கலப்பதால் பயன் என்ன? அந்தக் காட்டாற்று வெள்ளத்தைக் கரைகட்டித் தேக்கினால் அழிவையும் தடுக்கலாம்; உயிர்களையும், பயிர்களையும் வாழ வைக்கலாம் அல்லவா! நம் நாட்டு இளைஞர்களின் ஆற்றலை நல்வழிக்குப் பயன்படுமாறு செய்ய வேண்டும். குடித்துவிட்டுக் கும்மாளம் அடிப்பதும், கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டுத் திரைப்படங்களுக்குப் போவதும், ஜாதி-சமயக் கலவரங்களுக்கு அடியாள்களாக மாறுவதும் தேவைதானா? திரைப்பட நாயகர்களுக்கு "ரசிகர் மன்றம்' அமைப்பதும், அவர்களது படங்கள் வெளிவந்துவிட்டால் பால் அபிஷேகம், பீர் அபிஷேகம் செய்வதும் அவர்களது சக்தியை வீணடிப்பதாகும்; விழலுக்கு இறைப்பதாகும்; இளைய சமுதாயத்துக்கே இழிவாகும். "காலம் கண் போன்றது; கடமை பொன் போன்றது' என்பது இவர்களுக்குத் தெரியவில்லை. இதனால்தான் கிடைத்தற்கரிய தங்களின் அருமையான இளமைப் பருவத்தைக் கேளிக்கைகளிலும், வீண் பொழுதுபோக்குகளிலும் செலவழிக்கின்றனர். இன்னும் சிலர் அடுத்தவர்களை - அதிலும் பெண்களையும், பெரியவர்களையும் கேலியும், கிண்டலும் செய்வதில் இன்பம் காண்கின்றனர். மற்றும் சிலரோ தேவையற்ற போதைப் பொருள்களுக்கு அடிமையாகித் தவிக்கின்றனர். இதுபற்றி முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மிகவும் வருத்தத்துடன் கூறியுள்ளதை நினைவில் கொள்ள வேண்டும். ""இன்றைய இளைஞர்களை நினைத்து எனக்குக் கலக்கமாக இருக்கிறது. அவர்கள் போதைப் பழக்கத்துக்கு ஆளாகித் தவிக்கின்றனர். இந்தியாவின் எதிர்காலமே இதனால் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது...'' என்பதே அவர் கவலை. நேற்று என்பது இறந்தகாலமாகிவிட்டது. நாளை என்பது நமக்கு வராமலேயே போய்விடலாம். இன்று மட்டுமே நிச்சயம். அதனை வாழ்ந்து காட்ட வேண்டாமா? இன்றைய வாழ்க்கையே நாளைய வரலாறு. நாம் இதுவரை வரலாறு படித்தது போதும்; புதிய வரலாறு படைக்க வேண்டாமா? ""இத்தகைய வீர இளைஞர்கள் நூறு பேர் முன்வரட்டும், இவ்வுலகத்தையே தலைகீழாக மாற்றிவிடலாம். இப்படிப்பட்டவர்களின் மனோசக்தி, பிரபஞ்சத்தில் உள்ள வேறு எதையும்விட வலிமை படைத்ததாகும். இவர்களின் மனோசக்திக்கு முன்னர் எதுவும் நிற்க முடியாது; பணிய வேண்டியதுதான்...'' என்று பேசியவர் சுவாமி விவேகானந்தர். வீரத்துறவி விவேகானந்தர் தனது வெற்றிகரமான அமெரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு, 1897 ஜனவரி 26 அன்று தாயகம் திரும்பினார். சென்னையிலும், கொல்கத்தாவிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அவர் பேசிய பேச்சுகள் இந்தியாவை எழுந்து நிற்க வைத்தது; இளைஞர்களை எழுச்சி பெற வைத்தது. இந்திய இளைஞர்கள் உடல் பலமற்றவர்களாக இருப்பதைக் கண்டு வருந்தினார். அதனால் அவர்கள் சோர்வுமிக்கவர்களாக இருக்கின்றனர்; உழைக்க முடிவதில்லை. சோம்பலும், சுயநலமும் ஒழியாமல் மதநேயமும், மனிதநேயமும் எப்படி வளரும்? ""எனது இளைய நண்பர்களே! பலமுடையவர்களாக ஆகுங்கள். அதுதான் நான் உங்களுக்கு அளிக்கக்கூடிய அறிவுரை. நீங்கள் கீதையைப் படிப்பதைவிட கால்பந்து விளையாடுவதன் மூலம் சுவர்க்கத்துக்கு அருகில் செல்வீர்கள். உங்கள் கை கால் தசைகளில் இன்னும் கொஞ்சம் பலம் வந்தால், கீதையை நன்றாகப் பொருள்புரிந்து கொள்வீர்கள்...'' இவ்வாறு சென்னை வரவேற்பில் அவர் பேசினார். இந்தியாவின் புகழையும், இந்து மதத்தின் புகழையும் உலகம் முழுவதும் பரப்பிய விவேகானந்தர், இளைஞர்களின் மேல் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். "சுவரை வைத்துத்தான் சித்திரம் எழுத வேண்டும்' என்பதுபோல இளைஞர்களைக் கொண்டுதான் இந்தியாவை எழுப்ப வேண்டும் என்று எண்ணினார்; எதிர்காலம் என்பது இளைஞர்கள் கைகளில்தான் இருக்கிறது என்று நம்பினார். அதனால்தான் அவர் பிறந்தநாள், "தேசிய இளைஞர் தின'மாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் மக்கள்தொகையில் 54 கோடிப் பேர் அதாவது சுமார் பாதிப்பேர் 25 வயதுக்கு உள்பட்ட இளைஞர்கள். ஆண்டுதோறும் நாட்டில் 30 லட்சம் பட்டதாரிகள் உருவாக்கப்படுகிறார்கள். 10 மற்றும் 12-ம் வகுப்பு முடித்தவர்களில் சுமார் 70 லட்சம் பேர் ஆண்டுதோறும் வேலை தேடுகிறார்கள். இந்த இரு பிரிவினருமாக வேலைவாய்ப்புச் சந்தைக்கு ஆண்டுதோறும் 1.3 கோடி இளைஞர்கள் சேர்ந்துகொண்டே இருக்கின்றனர். எனினும், 21-ம் நூற்றாண்டைப் பொறுத்தவரை உயர் கல்வி பெற்ற ஏராளமான இளைஞர்கள் நாட்டுக்குத் தேவை. இத்தேவையைக் கருத்தில் கொண்டு பல்கலைக்கழகங்களும், இதர கல்வி நிறுவனங்களும் இரண்டுவிதப் பிரிவினரை உருவாக்க வேண்டும். குறிப்பிட்ட அறிவுத் திறனும், திறமைகளும் உடைய இளைஞர்கள் ஒருவகை. உயர்கல்வி கற்ற இளைஞர்கள் இன்னொருவகை. இவர்களுக்கு நம் நாட்டில் மட்டுமன்றி, உலக அளவிலும் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. இன்றைய காலகட்டத்தில் நாட்டின் அனைத்துத் துறைகளிலும் இளைஞர்களின் பங்களிப்புத் தேவைப்படுகிறது. ஆனால், அவர்களை நாடு பயன்படுத்திக் கொள்கிறதா என்றால், "இல்லை' என்பதை வருத்தத்துடன் ஒத்துக்கொள்ள வேண்டும். கல்வி என்பது அறிவு வளர்ச்சிக்கான அடையாளம் என்பதுபோய், பணம் சம்பாதிப்பதற்கான "பட்டம்' என்றே எண்ணும் நிலை ஏற்பட்டுவிட்டது. உயர்கல்வி கற்பதே அமெரிக்கா முதலிய அயல்நாடுகளுக்கு அனுப்புவதற்காகத்தான் என்பதில் பெற்றோர்கள் தீர்மானமாக இருக்கின்றனர். இந்திய ஏழை எளிய மக்களின் வரிப்பணத்தில் படித்துவிட்டு, அயல்நாடுகளுக்குச் சேவை செய்ய இவர்கள் அனுப்பப்படுகின்றனர் என்பது எவ்வளவு பெரிய அவலம்! இந்த இளைஞர்களின் சேவை தாயகத்துக்குத் தேவையில்லையா? மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப இங்கு வேலையில்லாத் திண்டாட்டமும் வளர்ந்து கொண்டிருக்கிறது. அரசுத் துறைகளும், பொதுத்துறைகளாகி, தனியார் துறைகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. அரசுத்துறையிலும் காலியாகும் இடங்கள் நிரப்பப்படுவதில்லை; குறைக்கப்படுகின்றன. ""இளைஞர்கள் எல்லாம் அரசியலுக்கு வரவேண்டும்'' என்று ராகுல் காந்தி இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அழைப்பு விடுத்து வருகிறார். இன்று அரசியலில் இருப்பவர்கள் எல்லாம் முதியவர்களாகவே இருப்பதால் அடுத்த தலைமுறை அவசியம் தேவைதான். ஆனால், இந்தியாவில் மக்களாட்சிமுறை நடந்தாலும், இங்கு மன்னராட்சி முறையைப்போல வாரிசு அரசியலே வெற்றிகரமாக நடந்து வருகிறது. நேருவின் பரம்பரையில் வந்துள்ள ராகுல் அடுத்த பிரதமராகும் வாய்ப்பிருப்பதால் அவர் அரசியலில் வெற்றிகரமாக வலம் வருகிறார். இப்போதே பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர் பதவியை விட்டுத்தரத் தயாராக இருப்பதாக அறிவித்துவிட்டார்; பிறகு கேட்க வேண்டுமா? இன்று அரசியல் லாபகரமான தொழிலாகத்தான் இருக்கிறது; குற்றவாளிகளின் கடைசிப் புகலிடமாக அல்ல, முதல் புகலிடமாகவே இருக்கிறது. அதனால்தான் நல்லவர்கள் அங்கு செல்லவே அஞ்சுகின்றனர். எனினும், நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அரசியல்தான் நம்மை ஆள்கிறது. அதனைப் புறக்கணித்துவிட முடியாது. இந்திய அரசியல் எப்போதுமே இப்படி இருந்தது இல்லை. காந்திஜி, பெரியார், காமராஜ், அண்ணா, ஈ.எம்.எஸ். போன்ற எண்ணற்ற தியாகசீலர்கள் அரசியலில் இருந்திருக்கின்றனர். அந்தத் தூய அரசியலை மறுபடியும் கொண்டுவர வேண்டும். இளைஞர்கள் இதில் ஈடுபட்டு, எதிர்நீச்சல் போட்டு ஒரு புதிய வரலாறு படைப்பதை நாம் வரவேற்க வேண்டும். "இளங்கன்று பயமறியாது' என்பது பண்டைத்தமிழ் மக்களின் பழமொழி. பயமறியாத இளைஞர்களின் போராட்டமே உலகம் முழுவதும் வெற்றிக்கனியைப் பறித்துத் தந்துள்ளது. இந்திய விடுதலைப் போராட்டமும் அப்படித்தான். இன்னும் பறிக்க வேண்டிய கனிகள் ஏராளம். இளைஞர்களே! எழுந்து நில்லுங்கள். இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?
நன்றி -தினமணி ..